Friday, August 27, 2004

வளர்ச்சி

மழையடிக்கும் இரவில்
நடுங்கிய படி
ஊளையிட்டது
செவளை நாய்.

குட்டியாய் இருந்த போது
வீட்டுக்குள் பாதுகாக்கப்பட்ட
பழைய நினைவுகளோடு..

வளர்ச்சிகள்
வளமைக்கான
அடையாளமாக மட்டும்
அமைவதில்லை
அனைத்து நிகழ்வுகளிலும்...

Tuesday, August 24, 2004

வீடியோகான் கோப்பை- அர்த்தமற்ற முத்தரப்புப் போட்டிகள்

ஹாலந்தில் கிரிக்கெட் போட்டி நடத்தவில்லை என்று யர் அழுதார்கள். உலகத்தின் எந்த மூலையிலும் கிரிக்கெட் நடத்தட்டும். ஆனால் உருப்படியாக வெயில் அடிக்கும் தேசத்தில் நடத்தலாமே. அதைவிடுத்து 100 ஓவர்கள் சாத்தியப்படாத மழைப்பிரதேசத்தில் போட்டிகளை நடத்தி இந்தியாவையும் மூட்டை கட்டி அனுப்பி விட்டார்கள்.

தொன்றுதொட்டே ஓவர்கள் குறைக்கப்பட்ட மேட்சுகளில் நாம் தோல்வியுற்றே வந்திருக்கிறோம். இந்தவகையான மேட்சுகளை வெல்வதற்கு உதவும் அதிரடி ஆட்டம் ஆடும் சக்தி நம் வீரர்களுக்கு இருந்ததில்லை.அடுத்த பேட்ஸ்மேன் அவுட்டா, இப்போதுதான் களமிறங்குகிறோமா? என்பதைப் பற்றியெல்லாம் கவலையின்றி விளாச வேண்டும். குறிப்பாக லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்கு விளாச வேண்டும். இந்திய அணியின் பாரம்பரிய பலமே (???) முன்வரிசை ஆட்டக்காரர்கள்தான். 10ம் இடத்தில் குளுஸ்னரைப் போல , வாசிம் அக்ரத்தைப் போல திறமையுள்ளவர்கள் எப்போதுமே இருந்ததில்லை. ஆறு விக்கட்டுக்களை இழந்தபின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் மட்டும் அடித்து வெற்றி பெறுவது பெரும்பாலும் நடக்காத விசயம். இதனால்தான் ஸ்ரீநாத்தும், கும்ப்ளேயும் இணைந்து ஆடி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூரில் ஈட்டித் தந்த வெற்றியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறாம்.

பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் சுலபமாக தோற்றுவிட்டோம். இத்தனைக்கும் நல்ல துவக்கம் கிடைத்தது. அப்துல் ரஜாக்கை தூக்கி அடித்து பாகிஸ்தானின் வெற்றியைத் துவக்கி வைத்தார் கங்குலி. அவருக்கு புல் சாட் கைவராத கலை. மிட் விக்கெட் திசையில் ஆளில்லாத போது மணிக்கட்டை ரோல் செய்து தரையில் பந்தை அனுப்பி இருந்தாலே நான்கு கிடைத்திருக்கும். வானளாவ அடித்து யோஹானாவிற்கு அற்புதமான காட்ச் கிடைக்க வகை செய்து விட்டார். கங்குலி இதைப்போல அவுட்டாவது முதல்முறை அல்ல. அதே சமயம் இதுவே கடைசிமுறையுமல்ல. இனிவரும் மேட்ச்களிலும் புல் அடித்து அவ்வப்போது அவுட்டாவார்.

சிறப்பான சுழற்பந்தை எதிர்கொள்ள கயி·ப்பும், யுவராஜும் சிரமப்படுகிறார்கள் என்பது என் கருத்து. இதில் யுவராஜ் அதிரடி ஆட்டம் மூலம் சமன் கட்ட முயற்சிக்கிறார். கயிஃப்பிற்கு அதுவும் கைவரவில்லை. நமது உள்நாட்டுப் போட்டிகளின் தரத்தினை பலர் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள். இதன் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் , இதில் ஆடுவதால் கிடைக்கும் சுழற்பந்தை எதிர்கொள்ளும் திறமையும், நம்பிக்கையும்.அதிக உள்ளூர் போட்டிகளில் ஆடாதது மேற்கூறிய இருவருக்கும் சுழற்பந்தை எதிர்கொள்ளும் திறமையை குறைத்து விட்டது என நான் நினைக்கிறேன். இவர்களைக் காட்டிலும் ரோஹன் பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.யார் கவனித்தார்கள் அதை. ஹாலந்திலிருந்து இந்தியா திரும்பி விடுவார் அவர். ICC cup அணியில் அவர் இடம்பெறவில்லை.

பாக்கிஸ்தானுடன் இரு மேட்சுகளில் உதை வாங்கி விட்டோம். இது கவலை அளிக்கிறது. பாக்கிஸ்தானுடன் தோற்க ஆரம்பித்தால் அது மெகா சீரியல் போல நீளும். ஜாவேத் மியாண்டாட்டை அவுட்டாக்கின பின்பும், மன்சூர் இலாஹியின் விளாசலில் தோற்ற சார்ஜா மேட்சுகள் நினைவிலிருந்து பயமுறுத்துகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாதிரியான முத்தரப்புப் போட்டிகளில் விளையாடுவதால் கிடைக்கும் பயன் என்ன? அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டு மேட்ச் பிட்னஸ் இல்லாமல் ஆகாய விமானத்தை ஆம்புலன்சாக்கி திரும்புகிறார்கள். அடித்து ஆடுவதைக் காட்டிலும் அடி பட்டுக் கொள்வதே என் விளையாட்டு என்று மார்தட்டுகிறார் அஜித் அகர்கர். கவுண்டியில் கொஞ்சம் சுமாரா பந்து போட்டாரே என வியந்தால் ஒரே மேட்சில் மீண்டும் காயம்.

வரலாறு காணாவிதமாக ஆசியக் கோப்பைக்கு முன் பல ஆயத்த முகாம்கள். ஒரு முகாம் உடல் திட அதகரிப்பிற்காக மட்டும் நடத்தப்பட்டது. பலன் அதிகரித்த காயங்களைத் தவிர வேறு எதுவுமில்லை.

அணி வீரர்கள் பலமற்றிருக்கும் நிலையில் இவ்வளவு டோர்னமெண்டுகளில் ஏன் பங்கு பெற வேண்டும்? அதை நாம் ஏன் பார்த்து தொலைக்க வேண்டும்?

Monday, August 23, 2004

வலைப் பதிவுகளைப் பற்றிய சுஜாதாவின் கருத்து

இந்த வார ஆனந்த விகடன் "கற்றது பெற்றதும்" பகுதியில் வலைப்பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. இப்பகுதி மீண்டும் துவக்கப் பட்டவுடன் கூடிய விரைவில் வலைப்பதிவுகளைப் பற்றி குறிப்பிடுவார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதைப் பற்றிய அவரது கருத்துதான் என்னை ஆச்சரியப் படுத்தி விட்டது.

முன்பு காலத்தில் வெளியிடப்படும் கையெழுத்துப் பிரதிகளின் நவீன வடிவம்தான் வலைப்பதிவுகள். "கவிதை, கதை என எழுதிவிட்டு பதினைந்து நிமிட பாராட்டுதலுக்கு காத்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. மேலும் இவ்வாறுதான் வேற்று லோகத்தில் உயிரினம் இருக்கிறதா? என்று சிலர் தேடுகிறார்கள் என்றும் முத்தாய்ப்பாக கூறியுள்ளார்.சுஜாதாவிடமிருந்து இத்தகைய மேம்போக்கான கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

ஜர்னலிசத்தின் புதியபரிமாணம் என்று ஹிந்து பத்திரிக்கை வலைப்பதிவுகளைப் பற்றி தலையங்கம் எழுதியிருக்கிறது. சுஜாதா இதன் சாத்தியங்களில் நம்பிக்கையில்லாத வகையில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.பாராட்டுகளுக்காக மட்டும் அனைவரும் Blogging செய்யவில்லை.ஒரு படைப்பை பத்திரிக்கைகளில் வெளியிட, சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களுடன், அது எத்தகைய படிவத்தில் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் , சுஜாதாவைப் போன்ற வெகுசிலரே அதில் வெற்றி காண முடிந்திருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் சுஜாதாவைக் காட்டிலும் மேதாவிகள் உலகில்
இல்லை, அவர்களால் எழுத இயலாது என்பதல்ல. இத்தகைய மேதாவிகளின்
கருத்துக்களும் பிறருக்கு கிடைக்க blog உதவி செய்கிறது என்பது என் கருத்து.

வலை உபயோகத்தை அதிகரிப்பது என்பது இந்திய போன்ற பல மொழி பேசும் நாடுகளுக்கு மிகவும் சவலான விசயம். "டிஜிட்டல் பிளவை இணைக்கிறோம்" என வரிந்து கட்டிக் கொண்டு தமிழ்நாடு, ஆந்திரா என பல மாநிலங்கள் கிளம்பிவிட்டன. n-louge, dristhi என பல கிராம தவகல் குறுநிலையங்களை நிறுவும் நிறுவனங்கள் கிராமங்களுக்கு கணனியை அறிமுகப் படுத்தி உள்ளன. சாதாரண மக்களுக்கான கணினி ஆர்வம் , அதன் மூலம் கிடைக்கும் பயன்களைப் பொறுத்தே அதிகரிக்க செய்யும். இதற்கு முக்கியமான தடைக்கல்லாய் இருப்பது பிராந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட 'Content". தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கணிசமான content ஜெனரேட் செய்ய வலைப்பதிவுகள் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன். வலைப்பக்கங்களில் நான் பார்த்த சில விசயங்கள் இந்த நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது.

சுரதா.காம்- ல் நான் பார்த்த யுனிகோட் பற்றிய பாடத்திட்டம், மிக எளிமையான, அருமையான படைப்பு.ஒவ்வாருவரும் தனக்கு தெரிந்த துறையில், தனக்கு தெரிந்த கருத்துக்களை இதைப் போன்ற பாடத்திட்டமாக உருவாக்கினாலே போதும். கணிசமான கணினி சார்ந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுவிடும்.

மேலாண்மைத் துறையில் புதிய சித்தாந்தங்களை தமிழ்படுத்தும் முயற்சிகள் எங்கு மேற்கொள்ளப் படுகிறது, எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது என்க்கு தெரியாது. ஆனால் தமிழில் மார்க்கெட்டிங் பாராட்ட வேண்டிய முயற்சி.இவ்வகையான முயற்சிகள் வெகுஜனப் பத்திரிக்கைகளில் சாத்தியப்படாது. அவர்களுக்கு யோகாவைப் பற்றி எழுதவும் நடிகை மாடல்கள் தேவைப்படுகிறார்கள் .

வெங்கட்டின் வலைக்குறிப்புக்களில் பல அறிவியல் கட்டுரைகளை பிரிண்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு படிக்க கொடுக்கலாம்.

வந்தியத்தேவனின் போர்க்கப்பல்கள் பற்றிய பதிவுகளும் வெகுஜனப் பத்திரிக்கைகளில் கிடைக்காத விசயங்கள். அரிதாக யாராவது டாலர் தேசம் எழுதினாலும், புத்தகமாக வரும்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இன்னும் பல வலைப்பதிவுகளைப் பற்றி நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். கையெழுத்து பிரதிகளைக் காட்டிலும் மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சனநாயக ஊடகத்தை, சுஜாதா அலட்சியமாக விமர்சித்திருக்கிறாரே என்ற வருத்தைதைப் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.

சுஜாதாவின் இவ்வார "கற்றதும் பெற்றதும்" பகுதியே வலைப்பகுதியின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்து விட்டது. மைக்கேல் மூரின் பாரன்ஹீட் 9/11 படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் சுஜாதா.

வலைப்பதிவுகளில் விஸ்தாரமாக அலசப்பட்ட விசயம். இதனால் சுஜாதா எழுதிய கருத்துக்கள் புதிதாகப் படவில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரியான புதிய விசயங்கள் சுஜாதா சாரால் மட்டுமே அறிமுகப் படுத்தப் படும். இன்று வலைப் பதிவுகளால் சுஜாதா சார் எழுதியது பழைய செய்தியாகிப் போனது.

ஓங்கி வளரட்டும் வலைப்பதிவுகள்.

Saturday, August 21, 2004

முரசொலியால் அ (விம)ர்ச்சிக்கப்பட்ட குமுதம்

சென்ற வார குமுதத்தில் வெளியிடப்பட்ட டி. ஆர். பாலுவிற்கு நேர்ந்த கதி குறித்த கட்டுரைக்கு முரசொலியில் பதிலடி கொடுத்துள்ளார்கள். வழக்கம் போல இந்த வாரக் குமுதத்தில் அதை பிரசுரித்து விட்டார்கள். குமுதம் எந்த காலத்திலும் இவ்வகையான சம்பவங்களில் உணர்ச்சி வசப்பட்டது கிடையாது. " நாயே, பேயே" என திட்டி எழுதப்படும் கடிதங்களையும், ஹி..ஹி.. என்ற வார்த்தைகளுடன் பிரசுரித்து விடுவார்கள். இது குமுதத்தின் "Brand trait" ஆகவே அமைந்து விட்டது.

கலைஞர் முன்பெல்லாம் மாறன் எனது மனச்சாட்சி என்பார்.சென்ற வாரம் குமுதம் திமுக தொண்டர்களின் மனச்சாட்சியாக மாறிவிட்டது. இதைப் புறக்கணிப்பதனால் குமுதத்திற்கு நக்ஷ்டம் ஏற்படப் போவதில்லை. மாறாக தொண்டர்களின் உணர்வை மதிக்காத பாவத்தை, மீண்டும் செய்யப் போகிறார் கலைஞர். சினிமா மற்றும் கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கை என்று ஏதோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையைப் போல குமுதத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைகளும்
இதைத்தானய்யா செய்கிறார்கள் ( ஓரளவு குறைவு- கல்கியில்). முரசொலி வெளியிடும் குங்குமத்தில் இலக்கியம் மட்டுமா வெளியிடுகிறார்கள்? அசைவக் கதைகளுக்காக தனிப் பகுதி (கிளுகிளு பக்கம்) வெளியிட்ட பத்திரிக்கைதான் குங்குமம்.

உண்மைகள் சுடும் என்பார்கள். குமுதம் வெளியிட்ட உண்மை கலைஞரை வெகுவாக சுட்டு விட்டது. சுதாரித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அடுத்த தேர்தலில் மக்கள் வெகுவாக சுடுவார்கள்.மாநாடுகள் நடத்தி மட்டும் கட்சிகள் வள்ர்ந்ததெல்லாம் அந்த காலம். கூடும் கூட்டங்களைப் பார்த்து தப்பு கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு சொல்ல நான் யார். ஏதோ ஒரு சாமான்யன். குமுதத்தின் குரலே நாரசமாய் ஒளிக்கிறது.காலை வாரக் காத்திருக்கும் டாக்டர் அய்யா, உங்கள் சேலம் மாநாட்டிற்கு வந்து பாராட்டுவார். ( வருகிறாரா என்ன?) "தேன் தமிழ் பாயுது காதினிலே" என பெருமை பட்டுக் கொள்ளுங்கள்.

மக்கள் குரலைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அப்படித்தானே?

Thursday, August 19, 2004

ஜப்பானியர்களைப் பற்றிய பத்ரியின் தேவையற்ற கவலை..

ரஜினி ராம்கியின் பதிவைப் படித்து விட்டு தேவைக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டார் பத்ரி. புள்ளி விவர அலசல்களுடன் எழுதும் மனிதர்களும் சமயங்களில் சுய விருப்பு, வெறுப்பிற்கு பழியாகி விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. "ஜப்பானியர்களின் தேவையற்ற செயல்" என்பதை சொல்வதற்காக ரஜினி என்ற நடிகனைப் பற்றி கிழித்திருக்கிறார். ரசனை என்பது தனிமனிதன் சம்பந்தப் பட்ட விசயம். தன்னுடைய ரசனையே பிறருக்கு இருக்க வேண்டும் என்பதோ, பிறருடைய குறிப்பிட்ட ரசனையை வைத்து அவன் புத்திசாலி அல்லது முட்டாள் என்று முடிவு செய்வதோ நியாயமாகாது.இதே ஜப்பானியர்கள், கமலஹாசனைப் பார்க்க வந்திருந்தால் இவ்வாறு எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் கமலஹாசனை ரசிப்பது அறிவு ஜீவிகளுக்கான அடையாளம்.ரஜினி ரசிகர்கள் மூளையற்றவர்கள் என்பதே சிலரது கருத்தாக இருக்கிறது.

ரஜினியிடம் என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இவ்வாறாக குறிப்பிட்டு காரணம் சொல்ல முடியாத பல்வேறு ரசனைகளும், ரசிகர்களும் உலகத்தில் நிறைய இருக்கின்றன/இருக்கின்றார்கள் என்பதை பற்றி பத்ரி அறியாதவரா என்ன? எங்கோ இருக்கும் தொலை தேசத்தில் யாரும் கனவில் கூட நினைக்காத வகையில் ஒரு நடிகர் தாக்கத்தை ஏற்படுத்தினால், கிறுக்குத்தனம் என்று மட்டும் நிராகரிக்க முடியாது. இதற்கான உளவியல் காரணங்கள் அலசப்பட வேண்டும்.

தனிமனிதனை துதித்து, இவ்வாறு கிறுக்குத்தனம் செய்கிறார்களே? என்ற அக்கறையுடன் நீங்கள் எழுதியிருந்தால் நான் வரவேற்றிருப்பேன். உங்களுக்கு அந்த தனிமனிதன் ரஜினியாய் இருப்பதுதான் பிரச்சனையே. ஜக்குபாய் பற்றி யூகங்கள் வெளியிடும் பத்திரிக்கைகள் பிடிக்காது. கங்குலி- சச்சின் சண்டையைப் பற்றி எழுதும் பத்திரிக்கைகள் பிடிக்கும். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு முன் இந்திய அணி அப்படி கிழிக்கப் போகிறது, இப்படி கிழிக்கப் போகிறது என எழுதும் பத்திரிக்கைகள் பிடிக்கும். என்ன நியாயம் இது?

ரஜினியின் சாதனைகளை கலைரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இருவகையாக அலசலாம். கலைரீதியாக உங்களது கருத்தை விமர்சிப்பது நியாயமாகாது.வர்த்தக ரீதியாக ரஜினியின் சாதனைகள் பல்வேறு சினிமா தொழில் நுட்ப கலைஞர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் வாழ வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மினிமம் காரண்டி என்ற நிலைக்கும் பல மடங்கு மேலான வர்த்தகத் தளத்தில்தான் ரஜினி இருந்தார்/இருக்கிறார் . தற்கால சத்யராஜைப் போல மினிமம் காரண்டி நடிகர் என்று எழுதி, அதில் எம்.ஜி. ஆரையும் சேர்த்து , இருவரையும் கேவலப்படுத்தி விட்டீர்கள்.

சக்ஸஸ் பார்முலாவை உருவாக்கி அதிலே உழலுவது என்பதை கலைரீதியாக விமர்சிக்கலாமே தவிர, வர்த்தக ரீதியாக தவறு காணமுடியாது. மசலாப் பட பார்முலாக்களில் வெற்றி காண கமலஹாசனும் பேர் சொல்லும் பிள்ளை, கலைஞன் வரை முயற்சி செய்துதான் வந்தார். அவருடைய பலம் மசாலாப் படங்களில் இல்லை. சகல கலா வல்லவன் வந்த போதுதான் எங்கேயோ கேட்ட குரல் வந்தது. மிகவும் வித்தியாசமான படம். படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது. இந்த படத்தை பாராட்டி கல்கியில் அந்த காலத்தில் தலையங்கம்.. கவனத்தில் கொள்ளுங்கள் விமர்சனம் அல்ல தலையங்கம் எழுதியிருந்தார்கள்.ஆனால் வர்த்தக ரீதியாக "சகலகலா வல்லவன்" மாபெரும் வெற்றி.ரஜினியின் "எங்கேயோ கேட்ட குரல்" அத்தகைய வெற்றியை பெறவில்லை.

வெற்றியின் சூட்சமம் எதுவோ, அதை தொடர்வது வர்த்தக நியதி. அதைத்தான் ரஜினி செய்து வந்தார். ரஜினியைப் பொறுத்த மட்டில் அவரது படத்தை பார்க்காமலே விமர்சனம் செய்வதே சிலரது நிலையாய் இருக்கிறது.பத்ரி படம் பர்த்திருக்கிறாரா? இல்லையா?

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பின்னூட்டத்தின் பதிலாக, "ரஜினி படங்கள் ரசிகர்களின் ஆழ்மனதில் தவறான எண்ணங்களை விதைக்கும். அதனால் தமிழகத்திற்கு ஆபத்து" என்றெல்லாம் எழுதியிருக்கிறார் பத்ரி. என்ன சார் ? எப்பொழுது ராம்தாஸ் கட்சியில் சேர்ந்தீர்கள்? கொஞ்ச நாட்கள் முன்புதான் தினமலர் விசயத்தில் அய்யாவை விமர்சித்தீர்கள். அதற்குள் ரஜினி மீது தாக்குதல். அய்யாவை குளிர்விக்கவா?

தமிழகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அதில் என்ன இருந்தது? தனி நாடு கேட்கச் சொன்னாரா? தீவிரவாதிகளை ஆதரித்தாரா? செக்ஸ் காட்சிகள் அதிகம் இருந்ததா? "காதல் கொண்டேன்", "நியு" பார்த்து கெடாத தமிழ் சமுதாயம் ரஜினி படம் பார்த்து கெடுமா? "இதயக்கனி", "இன்று போல் என்றும் வாழ்க" படங்கள் விளைவிக்காத ஆபத்து ரஜினி படங்களால் விளையுமா? ரஜினி ஐஸ்வர்யாராவிற்கு இச் கொடுக்க கூடாது. கமல் கொடுத்தால் அது செக்ஸ் கல்வி. அப்படித்தானே?

அலசல்கள் நேர்மையாக இருக்க வேண்டும் பத்ரி. தனிமனித துதிக்கு எதிரான குரலாய் உங்கள் குரல் ஒலித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். இது அந்த தனிமனிதன் ரஜினியாய் இருந்ததால் வந்த வெறுப்பு.

உங்கள் சுய வெறுப்புகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எழுவதற்கு இதைக் காட்டிலும் சிறப்பான விசயங்கள் உங்களிடம் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன் நான்.

Wednesday, August 18, 2004

ஜீவ காருண்யம் (???)

வேடிக்கைப் பார்த்து
புள்ளையாண்டான் சாப்பிட்டால் போதும்.
நீளவில்லை கைகள்...
சுவற்றுப் பல்லிக்கு
விளக்குப் பூச்சிகள்
இரையாவதை தடுக்க.

Tuesday, August 03, 2004

கதவுகள் தட்டப்படுகின்றன

கேட்டுக் கொண்டேதானிருக்கிறது
கதவுகள் தட்டப்படும் சப்தம்.
அழைப்பு மணி மீதான
அவநம்பிக்கையால்
தட்டவே கைகள் நீள்கின்றன
பெரும்பாலும்.

அதிகாரத் தட்டல் ஆவேசமாய்..
ஆதாயத் தட்டல் நாசூக்காய்
யாசகத் தட்டல் தயக்கமாய்.
கதவுகள் திறக்காத போது
விரல்கள் இணைத்து
முக்ஷ்டி இறுக்கி
வலுக்கிறது தட்டல்.

ஆளில்லை என்பதுதெரிந்தும்
தட்டி விட்டு போவது
வாடிக்கையாகி விட்டது
சிலருக்கு.
குழந்தையின் நித்திரையையோ,
தியான மவுனத்தையோ
கலவி சுகத்தையோ
சிதைப்பதைப் பற்றிய கவலையின்றி..
தட்ட நீள்கிறது கைகள்.

சிதைவுகள் அனுபவித்தும்
கதவுகள் மூடியே இருக்கிறது.
மூடிய கதவுகளின் மேல்
தட்டல் வலுக்கிறது.

இந்த சப்தங்கள் நடுவே
கேட்காது போனது
மூடிய கதவின்
திறப்பை எதிர்பார்த்த
கைகளில்லாதவனின்
அலறல்.

பின் குறிப்பு: என்ன புரிஞ்சதா? புரியலையா? அடிக்காதிங்கப்பா.