Saturday, January 29, 2005

வளரும் நாட்டின் அவலங்கள்- ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம்

விமானப் பயணத்தின் போது படிக்கக் கிடைக்கும் செய்தித்தாள்கள் அவ்வப்போது சுவையாக இருக்கும். நாம் போவது ஹைதராபாத் என்றாலும் விமானம் மும்பையிலிருந்தோ அல்லது கல்கத்தாவிலிருந்து வந்திருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்குரிய செய்தித்தாளை படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இம்முறை மும்பை டைம்ஸ் ஆப் இண்டியா படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படிக்க நேரிட்ட செய்தி மிகுந்த அதிர்ச்ச்சியை அளித்தது. அரபு நாடுகளில் வசிக்கும் ஒருவர் தன் மகனை படிப்பதற்காக போபால் அனுப்பியிருக்கிறார்.அவருடைய உறவினர்கள் போபாலின் சிறந்த பள்ளியில் சேர்ப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள். சேர்க்கை முறையின் ஒரு பகுதியாக எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் பையனும் ஒரு மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளான்.

அங்கே ஜெனரல் அனஸ்தீஸியா கொடுத்து ஸ்கேன் எடுத்துள்ளார்கள். ஸ்கேன் எடுத்த பின் பையனின் மயக்கம் தெளியவில்லை. ஸ்கேன் எடுத்த இரு டாக்டர்களும் இன்னும் சிறிது நேரத்தில் பையன் எழுந்து விடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்.ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு போனதும் பையன் எழுந்து விடுவான் என்று கூறி வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள். பையன் கடைசி வரை எழவேயில்லை.மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டான்.

இச்செய்தி தரும் அதிர்ச்சியின் பரிமாணங்கள் பலவாக இருக்கிறது. முதலாவது பிரச்சனை- பள்ளியில் சேர்க்கும் போது எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பள்ளி ரெசிடென்சியல் ஸ்கூலா? என்பது தெரியவில்லை. ரெஸிடென்சியல் பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை கட்டாயமானதா? அதன் முக்கியத்துவம் என்ன? சாதாரண மருத்துவப் பரிசோதனையும், மருத்துவர் சான்றிதழும் போதாதா? இக்கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.

எனக்கென்னமோ இந்த ஸ்கேன் வலியுறுத்தல் எல்லாம் மிகப்பெரிய வியாபாரத் தந்திரமாக படுகிறது. மருத்துவமனையும் , பள்ளியும் இணைந்து கொள்ளையடிக்கும் யுக்திதான் இது.பணக்காரப் பள்ளிகளின் சேர்க்கை முறைகளை குறித்த தணிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்வதில்லை. இப்பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும் மேல்வர்க்கமும் மந்தை ஆட்டு மனோபாவத்தால் கேள்விகள் எழுப்புவதில்லை.எனவே எவ்வித சிக்கலுமில்லாமல் செழிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்.

இரண்டாவது பிரச்சனை- மருத்துவர் குழாமை பற்றியது. Diagnostic treatment என்ற கணிப்பு அடிப்படையிலான மருத்துவ முறைகளை தேவைக்கும் அதிகமாக வலியுறுத்தி வருமானத்தை பெருக்குவதில் பெரும்பாலான மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலான மருத்துவர்களுக்கு சொந்தமாக ஒரு ரத்தபரிசோதனை நிலையம்,ஸ்கேன் சென்டர், மருந்துக்கடை எல்லாம் உள்ளது. எனவே இந்த அனைத்து வணிகமும் செழிக்கும் வகையில் நோயாளிகளுக்கு பரிசோதனைகளும், மருந்துகளும் எழுதித் தருகிறார்கள். நோயாளி கொடுக்கும் பீஸைக் காட்டிலும்,சிறந்த வருமானம் மேற்குறிப்பிட்ட வணிக நிலையங்களிலிருந்து மருத்துவர்களுக்கு கிடைக்கிறது.

இவர்களுக்கு எதிரான துவேசத்தை மனதில் சுமக்கிறோம் .ஆனாலும் வெளிப்படுத்த ஏதோ ஒரு தயக்கம். இந்த தயக்கத்தின் தொடர்ச்சிகள், பள்ளியில் சேர விரும்பிய சிறுவனின் எதிர்பாராத மரணத்தைப் போன்ற அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவை- மேற்கூறிய அசம்பாவிதங்கள். மந்தைஆட்டு மனோபாவம் அகற்றப்பட்ட தனி மனித விழிப்புணர்வைத் தவிர, வேறு தீர்வுகள் இதற்கு இல்லை.

Wednesday, January 19, 2005

நூல் விமர்சனம்:சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்

எழுபதுகளின் கடைசி- தமிழ் திரையுலகின் பொற்காலம் என்பதை யாரும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர் , சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் ஆதிக்கத்திலிருந்து கமல் , ரஜினி என அடுத்த தலைமுறைக்கு ஆதிக்கம் மாற்றப்பட்டது, செட்டுக்களுக்கு வெளியே, கிராமங்களும் திரைப்படக் கதைக் கலன்களாக மாறியது, பாரதிராஜா, மகேந்திரன் போன்ற புதிய இயக்குநர்கள் அடையாளங் காணப்பட்டது, வசனங்களின் சத்தத்தில் மூழ்கிக் கிடந்த திரைப்படங்கள் மெளனத்தின் அவசியத்தையும் உணர்ந்தது, இளையராஜா என்ற புதிய இசைமன்னனின் சாம்ராஜ்யம் விரிந்தது ஆகியவை இக்காலக்கட்டத்தில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

தமிழக இயக்குநர்களில் மகேந்திரன் இயக்கிய படங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றாலும், அதிலும் வெற்றி பெற்ற படங்கள் சொற்பமே என்றாலும், அந்த சொற்ப வெற்றிகளின் மூலமே பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இவர்.வியாபார ரீதியாக மகேந்திரனுடைய சில திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கலாமே தவிர படைப்பாளியாய் அவரது திறமையையோ,படமாக்கிய விதத்தையோ, பரிசோதனை முயற்சிகளையோ யாரும் குறை கூற முடியாது. ஒரு ஒளி ஊடகத்தின் சாத்தியக் கூறுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் அவருக்கிருந்த வேட்கை, கதைக் களன்களை செம்மைப்படுத்துவதில் அவருக்கிருந்த அக்கறை, வணிகத்திற்காக சமரசம் செய்துக்கொள்ள விரும்பாத வீம்பு , இவையெல்லாம் அவருடைய போற்றத்தக்க குணங்கள்.

திரை உலகத்தார் புத்தகம் எழுதினால் அதில் அவருடைய அனுபவங்களும், தனி மனித புகழ்ச்சிகளும் மேலோங்கி நிற்குமே தவிர, படைப்பாக்கமும், திரைப்படமும் முன்னிலைப்படுத்தப்படாது. சிவாஜி கணேசன் அவரது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஏ.வி.எம், சரவணன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஸ்ரீதரின் நினைவுத் தொடரை கல்கியில் படித்திருக்கிறேன். இவையெல்லாமே அனுபவக் குறிப்புக்களே தவிர திரைப்பட ஆக்கத்தின் பரிமாணங்களை முழுமையாக அலசியதில்லை.

அந்த வகையில் பார்க்கும் போது, வெறும் அனுபவக் குறிப்புக்களை மட்டுமே எழுதாமல் திரைப்பட ஆக்கத்தின் பல சிக்கல்களை, பரிமாணங்களை கதாசிரியன், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளிலிருந்து எழுதியிருக்கிறார் மகேந்திரன். அவரது அலசல் பிரம்மிப்பூட்டும் விதமாக இருக்கிறது.

இப்புத்தகத்தில் அவரது ஒவ்வொரு படமும் ஏன் ஓடியது ? அல்லது ஏன் ஓடவில்லை என்பதற்கான அலசலை இயக்குநர்களுக்கான Case study என்று தாராளமாகக் கூறலாம். "முள்ளும் மலரும்" படத்தை எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகள், தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே நடந்த சண்டைகள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் இவையெல்லாமே வெற்றி என்பது சுலபமாக வருவதில்லை என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றன.
கமலஹாசனுடன் இருந்த நட்பை ஆத்மார்த்தமாக நினைவு கூர்கிறார் மகேந்திரன். "முள்ளும் மலரும்" படம் முழுவதுமாக முடிந்த பின்பு, செந்தாழம் பூவில் பாட்டின் முதல் சரணம் மட்டும் எடுக்கப்படாமலிருந்திருக்கிறது. தயாரிப்பாளர் காசு கொடுக்கவில்லை. பாலு மகேந்திரா சண்டை போட்டுக் கொண்டு போய்விட்டார். படத்திலிருந்து இப்பாட்டே நீக்கப்ப்ட வேண்டிய நிலைமை. இத்தருணத்தில் கமல் தயாரிப்பாளர் வேணுசெட்டியாரிடம் பேசியிருக்கிறார். செட்டியார் பணம் தர மறுத்து விட்டார். கமல் காசு கொடுத்து, பாலு மகேந்திராவிடமும் சமரசம் செய்து வைக்க, இப்பாடலை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு கலைஞனின் தாகத்தை இன்னொரு கலைஞனால் மட்டுமே உணரமுடியும் என்பார்கள். கமலுக்கு மகேந்திரனின் தாகத்தை உணரமுடிந்தது, அப்படத்தில் அவர் நடிக்க விட்டாலும் கூட. இதற்கு உண்மையிலே பெரிய மனசு வேண்டும்.
கமலின் இவ்வுதவியை மறக்காது அவருக்காக ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார் மகேந்திரன். மகேந்திரனின் மற்றொரு சிறப்பம்சம்- நாவல்களை படமாக்கியது. இதைக் குறித்தும் பலரும் அறியாத தகவல்களை குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலக்கதை உமா சந்திரனுடையது. ஆனால் இக்கதை படித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்- இக்கதைக்கும் படத்திற்கும் படத்தின் சில கேரக்டர்களை தவிர வேறு சம்பந்தமில்லையென்பதை. ரஜினி நடித்த காளி கேரக்டர் உமா சந்திரன் நாவலின் பிரதான கேரக்டர் அல்ல. மகேந்திரன் இந்நாவலை படிக்கத் தொடங்கியிருக்கிறார். சில பக்கங்கள் படித்தவிடனேயே காளி கேரக்டர் அவருக்கு பிடித்திருக்கிறது. உடனேயே கதையை மூடிவைத்து விட்டு, காளி கேரக்டரையும் அண்ணன் தங்கை பாசத்தையும் பிரதானப் படுத்தி கதையை பின்னி விட்டார். முழுப்படமும் எடுத்த பின்னரே கதையை மீண்டும் படித்துள்ளார். உமா சந்திரன் நாவல் படி காளி புலி கடித்து கையை இழக்கிறான். கதையின் இறுதியில் காளியும் , மங்காவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதைப் ப்டமாக எடுத்திருந்தால் படுமோசமாக இருந்திருக்கும். இருந்த போதிலும் காளி என்ற கேரக்டருக்கான இன்ஸ்பிரேசனை தந்ததால் உமா சந்திரனை அக்னாலெட்ஜ் செய்திருக்கிறார் மகேந்திரன்.

இதைப் போலவே புதுமைப் பித்தனின் கதையில் வரும் ஒரு தந்தை கேரக்டரை வைத்து உருவாக்கப்பட்டது உதிரிப்பூக்கள். இப்படத்தைப் பற்றியும் ஒரு அத்தியாயம்எழுதியிருக்கிறார்.பூட்டாத பூட்டுக்கள் ஏன் ஓடவில்லை? என்பது அலசப்பட்டிருக்கிறது. கதையின் மாரலில் தனக்கு ஒப்புதலில்லை என்றும், ஓடிப்போன பெண், மீண்டும் புருசனுடன் சேர்வதை மக்கள் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் கூறியுள்ளார். இதைப் படிக்கும் போது தோல்விக்கான காரணங்களை மகேந்திரன் நேர்மையாக அலசவில்லை என்றுதான் படுகிறது. இப்படத்தை பொறுத்தவரை அவர் நடிக்கவைக்க நினைத்தது நசுருதின் சாவையும், சுமிதா படேலையும். சில காரணங்களால் அது இயலாமல் போய் மலையாள நடிகர் சோமனையும், உதிரிப் பூக்கள் படத்தில் நடித்த இன்னொரு நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இதைப் போன்றே "கை கொடுக்கும் கை" படத்திலும் ரேவதியை ரங்கநாத் ( வில்லன்) கற்பழிப்பது போல காட்சி வைத்ததை தான் கட்டாயத்தின் பேரில் செய்ய நேரிட்டதாக குறிப்பிடுகிறார். இதையும் என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. ரஜினியின் "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தின் பின்னால் இப்படம் வந்ததும், தன் மனைவியை கற்பழித்தவனை ரஜினி கொல்லாமல் விடுகிறாரே என்ற ரசிகனின் ஆதங்கமும்தான் படத்தை தோல்வியடைய செய்தது.

இளையராஜாவின் பங்களிப்பை பல அத்தியாயங்களில் சிலாய்கித்து குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். ரஜினிகாந்தின் திறமை மேல் தான் வைத்த நம்பிக்கையயும், ரஜினியுடனான அனுபவங்களுக்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.ரஜினியின் நடிப்புத்திறனுக்கான சான்றாக விளங்கும் சொற்ப படங்கள் மகேந்திரனால் உருவாக்கப்பட்டது. இதற்காகவும் எனக்கு மகேந்திரனை பிடிக்கும். மகேந்திரனின் மலரும் நினைவுகளை தூர்த்ர்சனில் காண்பிப்பார்கள். ரஜினி நடித்த பல்வேறு நல்ல காட்சிகள் அதில் இடம் பெ ற்றிருக்கும்.

இப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் -சினிமாக் கனவு உள்ளவர்களுக்கான மகேந்திரனின் கடிதம். அத்தைப்பாட்டி அட்வைஸாக இல்லாமல் நிஜம் தெரிக்கும் ஆலோசனையாக இவர் எழுதியிருப்பது நரம்புகளை சிலிர்க்க வைைக்கிறது.ஆலோசனைகளையெல்லாம்சொல்லிவிட்டு,பிரபலாமாகவில்லையென்றால்அதில் தவறொன்றுமில்லை. திரைப்படமென்பது வாழ்க்கையின் ஓர் அங்கமே தவிர, வாழ்க்கையின் பல நல்லவிசயங்கள் திரைப்படத்திற்கு அப்பாற்பட்டுமிருக்கின்றன என முடிக்கிறார் பாருங்கள்.இந்த அத்தியாயத்தையே தனிப்பதிவாக இட வேண்டும், அப்போதுதான் இதன் மதிப்பு விளங்கும்.

சாசனம் படம் எடுத்த கசப்பான அனுபவங்கள், அதன் தயாரிப்பு செலவினங்களை கட்டுப்ப்டுத்த தெரியாத திறமையின்மை, என் எப் டி சியுடனான சண்டைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சாசனம் என்றாவது வரும் என்ற நம்பிக்கையுடன் புத்தகத்தை முடிக்கிறார்.

திறமையிருந்த அளவு மேலாண்மைத் திறன் இல்லாதவர் மகேந்திரன், இதனால்தான் வணிகரீதியாக முழுமையாக பரிமளிக்க முடியவில்லை அவரால். அவர் குறிப்பிட்டுள்ள பல மேற்கோள்களிருந்து அவருக்கிருந்த படிப்புத்திறமை வெளிப்படுகிறது.

நல்ல திரைப்பட ரசிகர்களும், கலைஞர்களும் படிக்க வேண்டிய புத்தகம். ஒரே இரவில் படித்து முடித்தேன்.

Monday, January 17, 2005

வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்

சங்கரமடப் பிரச்சனையின் பரிமாணங்கள் பல்வேறு விதமாக மாறி, தற்பொழுது மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்து விட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நியாயமானதுதான் என நினைத்தவர்கள் கூட தற்போது இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டார்கள். ஆனால் தனி மனிதனுக்கோ அல்லது இயக்கத்திற்கோ அரசாங்கத்தால் விளைவிக்கப்படும் இன்னல்களை, நமக்கு அம்மனிதனின் மீதோ அல்லது இயக்கத்தின் மீதோ இருக்கும் சுய விருப்பைப் பொறுத்தே ஒப்புக் கொள்கிறோம் அல்லது எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.

அரசாங்கமும் மனிதர்களின் சுயவிருப்பங்களையும் வெறுப்பினையும் தன்னுடைய செளகர்யத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.அரசாங்கத்தின் வழிமுறைகளை நடுநிலைமையுடன் அலசக் கூடிய விமர்சகர்களோ, பத்திரிகையாளர்களோ தற்போது இல்லை.தன்னுடைய எதிரியின் மீது அரசாங்கம் அராஜக தாக்குதலை மேற்கொண்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தன் மீது பாய்ந்தாலோ அய்யகோ என குரல் கொடுக்கிறார்கள்.

சங்கர மடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் நடவடிகைகளை அலசும் போது அது சட்டம் செய்யக் கூடிய கடமை மட்டுமே என யாராவது நியாயப்படுத்தினால் அது மடமை மட்டுமே. நசுக்கப்படுபவர் ஜெயேந்திரர் என்றவுடன் வரவேற்கும் வீரமணியும், ஞாநியும், நெடுமாறன் மேல் இதைப்போல நடவடிக்கை எடுத்தால் அராஜகம் என கூக்குரலிடுவார்கள். இது எவ்விதமான நடுநிலைமை? தனக்கு பிடிக்காதவரின் மீது எடுக்கப்படும் சில அராஜக நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாராட்டுவதும் பகுத்தறிவு வாதமா?

தமிழக அரசின் போலீஸ் நடவடிக்கைகள் , கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. நீதித் துறையின் கைகளை கட்டிப்போட்டு போலிஸ் நடவடிக்கைகளை எடுப்பது இவர்களது ஸ்டைல். கலைஞர் கைதிலிருந்து, ஏன் அதற்கு முன்பே பரிதி இளம்வழுதியின் கைதிலிருந்தே இந்த வழிமுறை துவங்கி விட்டது. கலைஞர் கைதின் போது நீதிபதி அசோக்குமார் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்ததும், அதற்காக அவர் எதிர் கொண்ட சிரமங்களும் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாய்ந்தது கஞ்சா கேஸ். இதிலும் போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சுதாகரன் என்ற தனிமனிதனின் நேர்மையைப் பற்றிய பிரமாதமான கருத்து யாருக்கும் இல்லை. எனவே "இவருக்கு வேண்டியதுதான்" என்பதே வெகுஜனக் கருத்தாக இருந்தது.

ஆனால் இத்தகைய வழிமுறைகளுக்கு எதிராக நாம் கடைபிடிக்கும் மவுனம் , அரசாங்கத்திற்கு அளிக்கும் அதீத தைரியத்தையும், நாளை இத்தகைய அராஜகம் நம் மேலேயே ஏவப்படலாம் என்ற ஆபத்தையும் நாம் உணரவில்லை. கிட்டத்தட்ட சுனாமி அலைகளை கரையிலிருந்து வேடிக்கைப் பார்த்த அறியாமைதான் நம் அனைவரிடமும் இருக்கிறது.

கலைஞர் கைதான போது ஜெயேந்திரர் வேடிக்கைப் பார்த்தார். செரீனா கைதான போது அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். பொடா சட்டங்களின் துஷ்பிரயோகத்தை பிஜேபியும் சோவும் வேடிக்கைப் பார்த்தது. இன்று ஜெயேந்திரரின் பிரச்சனையை வீரமணியும், ஞாநியும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அரசு ஊழியர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்ட பெரிய ஆங்கிலப் பத்திரிக்கை பட்டாளமேயிருந்தது. ரீடிப் தளத்தில் பல கட்டுரைகள் ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதப்பட்டன. இன்று அதே தளத்தில் ஜெயேந்திரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சுய விருப்பு வெறுப்பின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நடுநிலைமையுடன் ஆராயும் மனோபாவம் அனைவரிடமும் இல்லாததுதான்.

இதன் விளைவென்ன தெரியுமா?போலிஸ் பற்றிய பயம் நம் அனைவரிடமும் அதிகரித்து உள்ளது. "கஞ்சா கேஸ் போட்டிருவாங்கப்பா" என பயத்தை வெளிப்படுத்துகிறோம் நான் பெயிலபிள் வாரண்ட் , ஆண்டிசிபேட்டரி பெயில் பற்றிய லீகல் லிட்டரசி பெருகியுள்ளது. இதன் நடுவில் "காவல் துறை உங்கள் நண்பன்" என்பது வெறும் கேலிக் கூத்தாகப் போனது.

ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டன. இன்று அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக நாளை ஆட்சிக்கு வர நேரிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் என நினைக்கிறீர்களா? அராஜகம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. மெளனச் சாமியாராய் பொறுத்துக் கொண்ட உங்களையும் என்னையும் தவிர வேறு யாரையும் இதற்காக குறை சொல்ல முடியாது.

சங்கர மடம் அல்கொய்தா போல உருவகப்படுத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஜெயேந்திரரின் புலன் விசாரணை சிடி எதிர்கட்சி டிவி சானலுக்கு கிடைக்கிறது. இதைக் கசிய விட்டது யார்? யார் மீதும் இந்தக் கசிவை குறித்த துறை ரீதியான விசாரணை கூட ஏன் துவக்கப்படவில்லை? நாளை முக்கியமான ராஜாங்க ரகசியங்கள கசியாது என்பது என்ன நிச்சயம்?

சங்கர மட வழக்கிற்கு பல தனிப்படைகள் அமைக்கப் படுகின்றன. எக்கச்சக்கமான செலவு. இவற்றுக்கெல்லாம் நடுவே கூலிப்படையினால் முன்னாள் மந்திரி ஆலடி அருணா கொல்லப்படுகிறார். ஆளுங் கட்சியின் முன்னால் அமைச்சரே கொல்லப்படுகிறார். போலிஸின் பயமின்றி தமிழகமெங்கும் கூலிப்படைகள் உலவுகின்றன. இவையெல்லாம் இருக்க தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள்.

சுயவிருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சீரிய சிந்தனையும்,ஜனநாயக வலியுறுத்தலும் நம் தேசத்தின் அமைதிக்கு இன்றியமையாதவை. இந்த பங்களிப்புக்கு நாம் தயாரா என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியதே இன்றைய அவசியம்.

Wednesday, January 12, 2005

தாயாக முடியுமா?

எப்படி இருக்கிறாய்?

உண்மையை
சொல்ல இயலாத இக்கேள்வியை வைத்துத்தான்
தொடங்குகிறார்கள் உரையாடல்களை.

பெரும்பாலும் என் பதிலை
எதிர்பார்க்காமல்
உரையாடலை வளர்க்கிறார்கள்
அராஜகமாக.

எப்படியிருக்கிறாய் என்று
கேட்பதால் மட்டுமே
எல்லோரும் என் நலவிரும்பி
என நினைக்கமுடியாது.

பல லட்ச ரூபாய்
வணிக ஒப்பந்தத்தை
முறித்த வாடிக்கையாளனும்
அன்றைய தினம்எப்படியிருக்கிறாய்
என்றுதான்
என்னுடன் உரையாடலை துவக்கினான்.

நலமாயிருக்கிறேன்
என்ற சம்பிரதாயப் பதில்களில்
நிஜமிருந்ததில்லை எல்லா நாளும்.

என்னுடைய பதில்களின்
நிஜத்தை அறிய
அக்கறை இல்லை
பிறருக்கும்.

என்ன உனக்கு பொல்லாத அக்கறை?
என எதிர் கேள்வி கேட்க
தைரியமில்லை எனக்கும்.

நல்லாயிருக்கேன் என தொலைபேசியில்
பதில் சொன்னாலும்
குரலை வைத்தே
என்னடா தொண்டை கட்டியிருக்கா?
உடம்புக்கு ஒண்ணுமில்லையே?
என அக்கறைப்பட..

தாயாக முடியுமா அனைவராலும்?


புத்தகக் கண்காட்சி 2005- என் பார்வை



கடந்த மூன்றாண்டுகளாக புத்தகக் கண்காட்சியின் பிரபல்யம் அதிகரித்து விட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் நடக்கும் பாதையை விசாலப்படுத்தி விட்டார்கள். ஆனால் கடைகளின் சதுர அடிகளில் வழக்கம் போல கஞ்சத்தனம். புத்தகக் குவியலை பார்க்க முடிகிறதே தவிர , புத்தகத்தை நிதானமாக புரட்டிப் பார்ப்பதெல்லாம் செய்ய இயலவில்லை.

10 சதவீத தள்ளுபடி நிரம்பவே தொல்லை கொடுத்தது. 75 ரூபாய் புத்தகத்திற்கு 7.50 தள்ளுபடி கொடுத்து சில்லறை வேண்டும் என ஆங்காங்கே படுத்தி விட்டார்கள். ஒரு கடையில் 2.50 சில்லறைக்காக கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு சட்டைப் பாக்கெட்டை எல்லாம் துழாவிக் கொண்டிருக்க, கல்லாவில் இருந்த தாத்தா " சில்லறை பற்றி கவலைப்படாதீர்கள்" என்று மீதி கொடுத்தார். அவர் கல்லாவில் சில்லறை மலையே இருந்தது.

அசத்த வேண்டும் என்ற் நோக்கத்தில் களமிறங்கியிருந்தனர் கிழக்கு பதிப்பகத்தார். டிக்கெட் வாங்குமிடத்தின் முகப்பு அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. சீருடை டீசர்டும் அழகாக இருந்தது. சொற்ப சதுர அடிகளிலும் புரட்டிப்பார்க்க வசதியாக புத்தகங்களை அடுக்கியிருந்தார்கள். புத்தகப்பட்டியலும் தரமாக அச்சடிக்கப்பட்ட்டிருந்தது. வாழ்த்துக்கள்.

நடைபாதையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புக்கள் யாரையாவது வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தன.புத்தகக் கண்காட்சி வந்த பாவத்திற்கு காலை ஒடிக்க வேண்டுமா? யாராவது கவனித்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.

புத்தகக் கண்காட்சியில் எல் ஐ சியும், இன்னுமொரு வாகன பைனாஸ் கம்பெனியும் கடை விரித்திருந்தன.நான் பார்க்கும் போது ஈ ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஏதாவது வியாபாரம் நடந்ததா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சம்பந்தமில்லாத இடத்தில் கடை விரிக்கும் போது நன்மைகளும் இருக்கிறது, சிக்கல்களும் இருக்கிறது.பூம்புகார் பதிப்பகத்தில் பழைய புஷ்பா தங்கத்துரையின் நாவல்கள் சொற்ப விலைக்கு கிடைக்கின்றன. இது பழைய பதிப்புகள். சென்ற ஆண்டு ரூ 3.90க்கு ராஜேந்திரக்குமாரின் நாவல் ஒன்றை வாங்கினேன். இதே போன்று சுஜாதாவின் சில நாவல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கிடைக்கக் கூடும் ( கண்டிப்பாக ரூ3.90க்கு அல்ல)

ஆன்மீகம், யோகா, மருத்துவம் போன்ற துறைகளில் பல நூல்கள், பல்வேறு பதிப்பகத்தார்களால் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.வாங்குவதற்கு ஆளிருக்கிறார்களா? அல்லது அரசின் நூலக ஆர்டர்களை நம்பி இவை பிரசுரிக்கப் படுகிறதா என்பது தெரியவில்லை.

குழந்தைகளை கூட்டிக் கொண்டு கண்காட்சி போவது சிரமமான காரியம்தான். கூட்டம், நடக்க வேண்டிய தூரம் ஆகியவை இரண்டு முக்கியமான காரணங்கள். ஆனாலும் புத்தகக் குவியலைப் பார்க்கையில் "என்னதான் இருக்கு இதுல?" என்ற ரீதியில் குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வம் வளரலாம். Noddy காமிக்ஸ் 20ரூபாய்க்கு கிடைத்தது. லேண்ட்மார்க்கில் இது குறைந்த பட்சம் 60 ரூபாய்.

தமிழின் சிறந்த குழந்தை நூல்கள் எதுவும் விற்பனையில் இல்லை. காமிக்ஸ் வடிவத்தில் தமிழில் கதைகள் இல்லாதது குறையே. முன்பு "ரத்னபாலா" என்ற பாலர் மாத இதழில் துப்பறியும் சாம்பு படக்கதையாக வந்தது. துப்பறியும் சாம்பு போன்ற கதைகள் படக்கதையாக வந்தால் இன்றைய குழந்தைகளும் படிக்க இயலும்.

புத்தக கண்காட்சி நன்றாக இருக்கிறது என்று சக அலுவலர்களிடம் சொன்னேன். அவர்கள் என்னை கேட்கும் முதல்கேள்வி ஆங்கிலப் புத்தகங்கள் இருக்கிறதா? என்பதுதான்.தமிழே படிக்கத் தெரியாத , படிக்கும் அவசியம் உணராத மக்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுடைய குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கித்தந்தாலும் கூட ஆங்கிலப் புத்தகமே வாங்குவார்கள்.இந்த மனப்பான்மை கவலை தருவதாக உள்ளது.இந்த சூழலில் தொலை தேசத்தில் இருந்தாலும் புத்தகக் கண்காட்சியை பற்றி நினைக்கும் சில இணைய நண்பர்களை நினைத்தால்
மகிழ்ச்சியாக இருக்கிறது.

சபரி கேட்டரிங் நுழைந்தவுடன் இருந்தது. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு விட்டுத்தன் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தேன். நடந்த தூரத்தையும்,தேவைப்பட்ட நேரத்தையும் பார்க்கும் போது பஜ்ஜி சாப்பிட்டு தெம்பேற்றிக் கொண்டது நல்லதாகவே பட்டது.

நான் வாங்கிய நூல்கள்

சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்

அகி- முகுந்த் நாகராஜன் ( நன்றி இகாரஸ் பிரகாச்)

பறவை யுத்தம்- பா. ராகவன்

என் பெயர் ராமசேக்ஷன்- ஆதவன்

டாலர் தேசம்- பா. ராகவன்

நிர்வாண நகரம்- சுஜாதா

எங்கெங்கு காணினும்- ஜெயகாந்தன்

சித்தர் வரலாறு

Noddy comics- 3

தினம் ஒரு உயிர்

ஊழலே உன் வேர் எங்கே- ஞாநி

அபூர்வ மனிதர்கள்- தி.ஜா

தகர்ந்து போன தன்னாட்சி கனவுகளும், தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும்- முனைவர் செயராமன்.

"சினிமாவும் நானும்" அதே இரவில் படித்து விட்டேன்.

மீண்டும் ஒரு ரவுண்ட் போக வேண்டும் என்பது விருப்பம்.நிறைவேறுகிறதா என்பது தெரியவில்லை.

கண்காட்சி சென்றதன் கூடுதல் மகிழ்ச்சி-பத்ரி மற்றும் ரஜினி ராம்கி யை சந்தித்தது.

Monday, January 10, 2005

சில கவிதைகள்

மாற்றம்


ஆறு மணிக்குகதவை சாத்தாதே
மகாலக்ஷ்மி வரும் நேரம் என்பாள்
அந்த காலத்தில் பாட்டி.

டெங்கு தரும் கொசுக்களுக்கு
பயந்து ஆறு மணிக்கு முன்பே
மூடப்பட்டு விடுகின்றன
வீட்டுக் கதவுகள்.

பார்வை மங்கிய
பாட்டிக்கு தெரியாது
கதவுகள் மூடப்படும ்சங்கதி.

யதார்த்தம்

தினம் நீர் ஊற்றிய
தாத்தா மறைந்த பின்பும்
பூக்கின்றன
ரோஜாச் செடிகள்

மதிப்பு

தற்கொலையா? படுகொலையா?
விசாரணை இல்லாமலேயே
அப்புறப்படுத்தவிட்டது
காப்பியில் விழுந்த கட்டெறும்பு.

அழுகின்ற குழந்தைக்கு

ஐந்து ரூபாய்க்கு
பலூன் வாங்கித் தர இயலா அளவு
பொருளாதாரப் பிரச்சனை இல்லைதான்.

ஆனாலும் பிதுங்கி வழியும்
29 சி ஏறி
பெரம்பூர் செல்லும்வரை
வெடிக்காமல் பலூனை பாதுகாக்க
வல்லமை இல்லாதவன் நான்.

எப்படி புரியவைக்க உனக்கு?

Tuesday, January 04, 2005

ஆட்டோ டோ டோ...

சென்னை நகரவாசிகள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது அதிசயமாகப் படும் செயல் ஆட்டோ க்காரர்கள் மீட்டருக்கு மேலாக காசு கேட்காதது. மற்ற ஊர்வாசிகள் சென்னை வந்தால் ???????? தோன்றும் செயல், ஆட்டோ க்காரர்கள் மீட்டரே போடாதது. போட்டாலும் 'மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுப்பா என்று கேட்பது. முன்பெல்லாம் ஆபிஸ் டூர் போய்விட்டு சென்னை திரும்பும்போது, சென்ட்ரலிலிருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ பிடிப்பது பிரம்மப்பிரயத்தனமாய் இருக்கும். கூசாமல் அருகில் இருக்கும் திருவல்லிக்கேணிக்கு 80 ரூபாய் கேட்டார் ஒரு ஆட்டோ க்காரர்.

இந்தச் சிக்கல்களையெல்லாம் மீறி போக்குவரத்திற்கு ஆட்டோ வையே நம்பி வாழும் (???) சென்னைவாசி நான். சமீபத்தில் என் நண்பன் நான் ஆட்டோ வில் பயணிப்பவன் என்பதை அறிந்ததும் ." உலகத்திலேயே சிறந்த பேரம் பேசுபவனாய் நீ மாறியிருப்பாய் " என கமெண்ட் அடித்தான். நான் அப்படி மாறவில்லை. என்னைப் பொறுத்தவரை, மீட்டர் போட ஒப்புக் கொண்டு, மீட்டர் கில்க்ரிஸ்டின் கிரிக்கெட் ஸ்கோராக உயர்வதைப் பார்த்து, பல்ஸை அதிகரித்துக் கொள்வதில் அர்த்தமில்லை. ஏறும் முன்னே வாடகையை பேசிக் கொள்வது நல்லது.

எங்கே போகிறோம் என்ற வழியை யாரிடமாவது விசாரித்து வைத்துக் கொள்வதும் உசிதம். இல்லாவிடில் தெரிந்த மாதிரி நடிக்கவாவது தெரிய வேண்டும். தனது ஆட்டாவில் ஏறியவர் விவரம் தெரிந்தவரா? என்பதற்கு ஆட்டோ க்காரர் ஒரு கேள்வி கேட்பார். உதாரணத்திற்கு நுங்கம்பாக்கத்திலிருந்து நந்தனம் செல்ல, மவுண்ட் ரோட் வழியா போகலாமா சார்? என்பார். வள்ளுவர் கோட்டம் வழியே போனால் தூரம் கம்மி. நீங்கள் சொல்லும் பதிலை வைத்து உங்களது ஜாதகத்தை கணித்து விடுவார்கள். மீட்டருக்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் செல்ல வேண்டிய இடத்திற்க்கு எவ்வளவு அதிக தூரம் பயணம் செய்யமுடியுமோ அவ்வளவு பயணம் செய்யலாம்.ஏறும் முன்னே பேரம் பேசிவிட்டால், குறுக்கு வழியில் எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் " குருக்கு வலி" யுடன் போய்விடலாம். இதில் ஒரே அசெளகரியம்,அண்ணாநகர் மூன்றாவது தெரு என்றால் தெருவில் நுழைந்தவுடன் நாம் இறங்குமிடம் வந்துவிட வேண்டுமென ஆட்டோ க்காரர் எதிர்பார்ப்பார் . எங்க சார்? எங்க சார்? என்று கேட்டுக் கொண்டே, பள்ளிக்கு கிளம்பும் எல். கே.ஜி குழந்தையாய் மெதுவாக ஆட்டோ ஊரும். "வாங்கின காசுக்கு சீக்கிரம் போய்யா" என எரிச்சல் வரும்.

சென்னையில் மட்டும் ஏனிந்த நிலைமை? மும்பை, பெங்களூரில் இந்நிலைமை இல்லை. இத்தனைக்கும் சென்னையில் தேவைக்கதிகமான ஆட்டோ க்கள் ஓடுகின்றன. பொருளாதாரத் தத்துவத்தின் படி அதிகமான சப்ளை இருந்தால் விலை குறையும். ஆனால் இங்கே இத்தத்துவம் செல்லுபடியாகவில்லை.

சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக வேண்டுமென்றால் "பெர்மிட்" வாங்க வேண்டும். சென்னையில் அதிகாரப் பூர்வமாக 40000 பெர்மிட்டுக்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேலாக ஆட்டோ க்கள் ஓடுகிறது. இதற்கு காரணம் பெர்மிட்டுக்கள் கறுப்பு சந்தையில் விற்கப்படுவதுதான். சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கப்படும் பெர்மிட் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இந்தப் போலி பெர்மிட்டுக்களை வைத்து பலர் ஆட்டோ க்களை வாங்கி ஓட்டுகிறார்கள்.ஒரு பெர்மிட்டை வைத்தே பல ஆட்டோ க்கள் ஓடுகின்றன.

சென்னை ஆட்டோ க்களில் பெரும்பாலானவை வாடகை வண்டிகள். பல ஆட்டோ க்கள் வக்கீல்களுக்கும், போலிஸ்காரர்களுக்கும் சொந்தமானவை.இவர்களது வண்டிகளை வா?கைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர்கள் சட்ட திட்டங்களை மதிப்பதில்லை. வாடகை- வண்டியைப் பொறுத்து ஒரு நாளைக்கு 100 முதல் 120 ரூபாய் வரை.பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்க குறைந்தது 400 ரூபாயாவது போணியாக வேண்டும். போதாக்குறைக்கு போலீஸ்காரர்கள் தரும் இன்னல்கள் வேறு. அனைத்து டாக்குமெண்டுக்கள் இருந்தாலும் தன்னுடைய "கலெக்க்ஷன்" டார்கெட்டை மீட் செய்ய கேஸ் புக் செய்வார்கள் போலீஸ்காரர்கள். இவ்வாறான பல தொழில் முறை சிக்கல்களும் இருக்கிறது ஆட்டோ க்காரர்களுக்கு.

இவற்றையெல்லாம் மீறி தேவையான அளவு வருமானத்தை நேர்மையாகவே சம்பாதிக்க முடியும் என்பதை எனக்குத் தெரிந்த சில ஆட்டோ க்காரர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதற்கு ஆட்டோ சொந்த ஆட்டோ வாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு நிதி வசதி செய்ய வங்கிகள் முன் வருவதில்லை. மார்வாடிகள் தரும் அதிக வட்டி கடன்கள் மூலமாகத்தான் ஆட்டோ வாங்குகிறார்கள். வட்டி கட்டாவிட்டால் ஆட்டோ பிடுங்கப்படும்.இதைத் தவிர பிட்னெஸ் சர்டிபிக்கேட் வாங்க வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாயாவது செலவழிக்க வேண்டியிருக்கும்.

என்னைப் பொறுத்த வரை பூனைக்கு யார் மணி கட்டுவது ? என்ற ரீதியில் ஆட்டோ ப் பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. கால் டாக்சிகள் வந்த பின் ஆட்டோ க்காரர்களின் அராஜகம் சிறிதளவு குறைந்திருக்கிறது. இருந்? போதிலும் ஆட்டோ க்காரர்கள் என்றாலே ரவுடிகள் என்ற பிம்பத்தை முழுவதுமாக கலைக்க முடியவில்லை. கசப்பான நிஜம் என்னவென்றால் 20 சதவீத ஆட்டோ க்காரர்களே இவ்வாறான ரவுடிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள் சம்பாத்தியத்திற்கு சிரமப்படும் சாமான்யர்களே.

அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் சட்ட திட்டங்களை முறையாக அமுல் படுத்தினாலே போதும் ஆட்டோ வாடகை பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட முடியும். ஆனால் அரசாங்கம் முன் வராது. அது வரை " இரக்கமுள்ள் மனசுக்காரன்டா" என்று ரஜினி பாடிவிட்டதால் மட்டும் ஆட்டோ க்காரர்களைப் பற்றிய எண்ணம் மாறப் போவதில்லை.
(Thatstamil.com தளத்தில் வெளிவந்த என் கட்டுரை)

Monday, January 03, 2005

சுனாமியும் மனிதமும்

நேசமுடன் வெங்கடேசை தொடர்ந்து அவரது ஆஸ்தான நடிகரான டாக்டர் கமல்ஹாசனும் மனித நேயத்தை வளர்த்ததற்காக கடலுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்( காண்க : சன் டிவி- சுனாமி நிதி அப்பீல்). இருவருடைய அலைநீளங்களும் ஒன்றாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அழிவுகளில் மக்கள் உதவிக்கரம் நீட்டுவதை மனித நேய வளர்ச்சி என்பதும், அதற்காக அழிவுக்கு நன்றி தெரிவிப்பதும் நியாயமாகப் படவில்லை.இவ்வழிவுகளுக்கு நாம் நன்றி தெரிவிப்பதை விட, இவை உணர்த்தும பாடங்கள் எவை? அதுக் குறித்த நம்முடைய எதிர்வினையும் செயல்திட்டமும் என்ன?என்பதை ஆராய்வதே உசிதமான செயலாகும். இதைக் குறித்த விவாதத்தை தொடர்ந்து நடத்துவதும், அரசாங்கத்தை இப்பிரச்சனையை மறக்கவிடாமல் செய்து திட்டங்களை நிறைவேற்ற வைப்பதும் படித்த இந்தியர்களின் கடமையாக இருக்கிறது.இன்று நிவாரணப் பணிகளுக்கு காட்டும் அக்கறை நாம் வாழும் தேசம் பாதுகாப்பானதா? என்பது குறித்த விழிப்புணர்விலும் இருக்க வேண்டியது அவசியம்.

நிலைப்படக் கூடிய வளர்ச்சி ( Sustainable Development) என்பது வளர்ச்சியின் முக்கியமான அம்சம். இந்தியா போன்ற வளரும் நாடுகளிம் மிகப் பெரிய பிரச்சனை நிலைப்படக் கூடிய வளர்ச்சியை பெறுவது.இங்கே பெரும்பான்மையான வளர்ச்சித்திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நீண்டகால பயன்களையும், எதிர்விளைவுகளையும் கணக்கில் கொள்ளாமல் , குறுகிய கால பயன்களை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்படுவதாக உள்ளது.வானளாவி எழுந்திருக்கும் கட்டிடங்களிலிருந்து, வீராணம் திட்டம் , கூடங்குளம் அணுமின் நிலையம் வரை அனைத்து திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எதிர்வினைகள் உண்டு. இவற்றைப் பற்றி விவாதிக்காமல்,எதிர்விளைவுகளை மறைத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இன்று கார்பரேக்ஷன் குழாயில் தண்ணீர் வரும் வரை நாமும் வீராணம் திட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த அக்கறையின்மைதான் இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாய் அமைந்து விடுகிறது. காடுகளை அழித்து நகரங்களை பெருக்கினோம். கடலருகே நிலம் என ரியல் எஸ்டேட் ரேட்டை கூட்டினோம். இயற்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ந்மக்கே ஒரு கர்வம் வந்துவிட்டது. விளைவு -மிகப் பெரிய உயிர் சேதம்.சதுப்பு நிலக் காடுகளும் , பவளப் பாறைகளும் மிகுந்திருக்கும் பட்சத்தில் சுனாமியின் தாக்கம் மட்டுப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். யாருக்கு இருக்கிறது இந்த புவியியல் அறிவு. பிறக்கும் குழந்தைக்கும், எது படிக்கிறதோ இல்லையோ, இதைப்படி என ஜாவா கற்றுக் கொடுக்கிறோம். அடிப்படை புவியியல் அறிவு கூட அற்றுப் போய் உருவாகிறது எதிர்கால சமுதாயம்.மக்களுக்கு சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. இதைப்பற்றிய பொது விவாதங்களும் குறைவு. அவற்றைப் பற்றிய விவாதங்கள் நடக்கும் போதும் என்னைப் போன்றோர் டிவியில் ரஜினிகாந்த் படம் பார்க்கத்தான் பிரியப்படுகிறார்கள்? எங்கு உருப்பட?

சென்னையில் சுனாமி தாக்குவதற்கு ஓராண்டு முன்பாக கட்டுமானர்களுக்கு, பூகம்ப ஆபத்துக் குறித்து ஆய்வு செய்யும் ஒரு குழு/இயக்கம், சென்னையின் அதிகரித்த பூகம்ப சாத்தியங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டுமான வடிவமைப்புக்கள் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தியிருக்கிறது. இதில சொற்பமான கட்டுமான நிறுவனங்களே பங்கு கொண்டுள்ளன என்பது வேதனையான விசயம். பிசினஸ் லைன் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்விதமான அக்கறையின்மை நம் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் ஊறிப்போயிருக்கிறது.

இந்த அக்கறையின்மையை எப்படி மாற்றப்போகிறோம்? புகை உமிழ்ந்து போகும் வாகனம் உடனடியாக மனிதனை கொள்வதில்லை.ஆனால் நாம் நேசிக்கும் மனிதருக்கு வந்திருக்கும் புற்று நோய்க்கு அது காரணமாயிருக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? சுற்றுப் புற் சூழல் கேடுகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் எல்லாம தனக்கு நிகழாது என்பதில் ஏதோ அனைவருக்கும் அ (வி) பரீத நம்பிக்கை இருக்கிறது. ராமேஸ்வரமும், தூத்துக்குடியும் தப்பியதற்கு இலங்கையை காரணமாய் சொல்கிறார்கள்.இவ்வாறு காப்பாற்றிய பூகோள அமைப்பிற்கு சேது சமுத்திரம் திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா? உடனடியாக " பாதிப்பு இருக்காது" என அறிக்கை விட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.இது ஆராய்ந்து சொல்ல வேண்டிய அம்சம்.சேது சமுத்ரம் நிலைப்படக் கூடிய பயன்களை தருமா என்பதை விரிவாக அலச வேண்டும். இது குறித்து ஏற்கனவே வெளிவந்த செய்திகள் கவலை தருவதாக இருந்தன. மீன்வளம் அழிக்கப்படுவதற்கான அபாயங்களை அவுட்லுக் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதெல்லாம் சுனாமி வரும் முன்பு.

தற்போது சுனாமிக்குப் பின், நமக்கு தெரியாத பல விளைவுகளை கடல் நிகழ்த்தக் கூடும் என்ற உணமையை உணர்ந்து, சேது சமுத்ரம் நன்மை தரும் திட்டமா? என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது குறித்த மூன்றாவது நாட்டின் ஆய்வறிக்கையை நாம் கோர வேண்டும். இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களை கடுமையாக influence செய்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

கூட்டமாக மாளும் போது ஏற்படும் நிலையாமை உணர்வு மனிதனை உதவி செய்யத்தூண்டுகிறது. இதுவும் ஒரு வகையான மயான வைராக்கியம்தான். கொஞ்ச நாள் கண்ணீர். கதை. பின்பு மீண்டும் சகஜ வாழ்க்கை. கடல் உருவாக்கிய மனிதம் மரித்துப் போகும். குஜராத் பூகம்பம் என்று நடந்தது என்பது எத்தனைப் பேருக்கு நினைவிலிருக்கப் போகிறது. அங்குள்ளவர்களின் மறுவாழ்வைப் பற்றி அறிந்து கொள்ளும் அக்கறையோ, அக்கறை இருந்தாலும் வாய்ப்போ எங்கே இருக்கிறது?

தனிமனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி. அதுதான் உண்மையான மனிதம். ஆபத்து வந்த பின் செய்யும் உதவிகள் அவசியம். ஆனால் ஆபத்தை தவிர்க்கும் விழிப்புணர்வை வளர்க்கும் முயற்சிகள் தேவை.
இவ்வாறான ஒரு விழிப்புணர்ச்சியை மக்களிடம்ஏற்படுத்தி, இயற்கை சீற்றத்திலிருந்தும்,அதை குறித்த மனித அலட்சியம் ஏற்படுத்தும் பாதிப்புக்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைத்தால் நானும் சுனாமிக்கும் , கடலுக்கும் நன்றி சொல்கிறேன்